Thursday, April 15, 2021

அவளில்லாத சில வருடங்கள்

சில வருடங்களாய்ப் பஞ்சம்
சில வருடங்களாயிற்று அவள் பிரிந்து
சில வருடங்களாய் ஈரமில்லை
சில வருடங்களாய் இல்லை என்னிடம் பெண்மை

அவள்: கவிதை.
நான்: வெற்றுக் காகிதச் சொந்தக்காரன்.

அம்மாயி (அம்மாவின் அம்மா)

நான்: என்னம்மா பன்றீங்க
அம்மா: ஊர்ல தான் இருக்கேன்
நான்: அன்னையர் தின வாழ்த்துக்கள்
அம்மா: எத்தனை தடவ அன்னையர் தினம் வரும்
நான்: இன்னைக்குதான் மா அன்னையர் தினம்
அம்மா: சரி எல்லாம் நல்லா இருகீங்களா
நான்: ம்ம்ம்
அம்மா: அஞ்சு நாளா இங்க இருக்கேன். அம்மாயி அப்படியே தான் இருக்காங்க
நான்: ம்ம்ம்
அம்மா: இப்ப கொஞ்சம் பரவாயில்லை. பேசறது தான் புரியலை.
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்

20 நிமிடங்கள்.

அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்


Wednesday, February 25, 2015

200 கோடி


சாலையில் செல்லும்போது யாரோ நிறுத்தி
இந்தா 200 கோடி;
கொடுக்கத்தோணியது கொடுத்தேன் வைத்துக்கொள் ...
என்றான்.

வாங்கிக் கொண்டேன்.

200 கோடி காசோலை வங்கியிலிட்டு
வரி செலுத்தி, கையில் மிச்சம் 140 கோடி
இருப்பதை உணர்ந்தேன்.

செலவுக்கெல்லாம் ஒரு கோடி போதும்
மீதி 139 கோடி வங்கியிலேயே இருக்கட்டும்
FDயில் போட்டு வைத்தால் ஒரு மாதம்
1 கோடி வரை வரும் என தீர்மானித்தேன்

இதை செலவு செய்வதெப்படி ?

பொண்டாடிக்கு மொத்தம் ஒரு கோடி கொடுத்து
தாய் வீட்டுக்கு அனுப்பலாமென்றிருந்தேன்.
அவளை கேட்டபொழுது, பணமெல்லாம் வேண்டாம்
உன்னோடு இருந்தால் போதுமென்றாள் ?!

வேலை விட்டு விடலாமா என யோசித்தால்
நேரத்தை கடத்தவே முடியாது என்று
வேலைக்கு தொடர்ந்து செல்ல தீர்மானித்தேன்.

நகரத்தில் மாந்தர் அதிகமிருப்பதால்
கிராமங்களிருக்கும் மக்களுக்கு இதை
செலவு செய்வது உசிதமென்று நினைத்தேன்

சொந்ததில் உள்ளவர்கெல்லாம் எதாவது
வசதிகள் செய்யலாம், பணமாயில்லை
ஆனால் அவருக்கு தேவையான விதமாய் எதாவது

சொந்த முயற்சியில் அடுத்தவர் பணத்துக்கு
ஆசைப்படாது வாழும் மனிதரை கண்டு
வருடதுக்கொருமுறை விருது கொடுக்கலாம் என்று
ஒரு யோசனை.

என் பிள்ளைகள் பள்ளிக்கு போய்தான் ஆகவேண்டும்
அவர் பள்ளிக்கு அருகில் வீடு அமைப்பது நல்லது
என்று தோணித்து.

இந்த பணம் என் அறிவை வளர்க்க உதவுமா
என்று வினா எழும்புகிறது. அதற்கு
இது அதிகம் உதவப் போவதில்லை
என்றே படுகிறது.

மகளைக் கேட்டேன், பணம் நிறைய
உனக்கு தந்தால் என்ன செய்வாய்.
வங்கியிலிட்டு அம்மா செருப்பு வாங்கித்
தரவில்லை என்றால் வாங்கிக் கொள்வேன்,
அம்மா பணம் மிச்சம் தானே ?! 
அதற்கு மேல் அது வங்கியிலேயே
இருக்கட்டுமென்றாள்.

பாலிலே குளித்து, ரோஜாவில் தூங்க
சில நாள் உதவினாலும் என்னவோ
200 கோடி என் வாழ்க்கையை
பெரிதாய் மாற்றாதோ ?

அடுத்தவருக்காய் அதிகம் யோசித்து
மிச்சமிருப்பதை செலவு செய்வது
பெரிய தலை வலியாகவே போகிறது.
சரியானவருக்கு கொடுக்க வேண்டுமே.

கோடிகளைக் காசோலையாக்கி சாலையில்
காத்திருக்கிறேன், பணதுக்கு ரொம்ப
ஏங்குகிறவனாய் பார்த்து அப்படியே கொடுத்து
விடலாமென்று.

ஏன் தருகிறாய் என்றால்,
கொடுக்கத் தோணியது கொடுக்கிறேன் வைத்துக்கொள் ...
எனலாம்.

Monday, May 20, 2013

கடினம்

நான் எனக்காய் தேர்ந்தெடுத்த இலக்குகளும்
நான் எனக்காய் தேர்வு செய்த முன்னோடிகளும்
நான் எனக்காய் உருவாக்கிய போட்டியாளர்களும்
நான் வெற்றி என கொக்கரித்த போர்களும்

உருவாக்கவேயில்லை.

நான் நல்லவனாய் இருந்த சில தருணங்களும்
நான் எந்த முனைப்புமின்றி அன்பாய் உருக்கித்
தகித்தும் சாத்தியப் படவில்லை.

எளிதில் வெல்ல முடியவில்லை மரியாதையைய்.

என் மரியாதையைய்.

Friday, November 18, 2011

Beautiful words

The most beautiful words I heard recently from somebody:

எங்கம்மா எங்கப்பா என் wife எல்லாரும் எதுவும் தெரியாம இருக்காங்க, நான் ஏதோ பெருந்தன்மையா போய்கிட்டிருக்கோம்னு நினைச்சேன். இப்பாதான் புரியுது அவுங்க தான் பெருந்தன்மையாப் போறாங்கன்னு.

Sunday, July 17, 2011

தாத்தாவின் நினைவு நாள்

முடிந்து போன ஒரு தலைமுறை
படிப்படியாய் கற்றுத் தருகிறது
முதலில் வார்த்தைகள் கொண்டு
பிறகு மெளணமாய்.

முதுமை, தளர்ச்சி
வளப்பமாய் இருந்த கைகள்
சுருக்கங்கள் உருவாகி
கயிற்றுக் கட்டில், விசிறி
பழைய நினைவுகள் என்று
வாழ்க்கை ஒயும் நேரம்
அருகிலிருந்து
பார்பது அவசியம்.

நாளை எனக்கு நடக்க இருப்பது
கண் முன்.
என்னை விட நல்லவனாய்
என்னை விட கடின உழைப்பென
வாழ்ந்த உயிருக்கு இதெல்லாம்.
நான் இன்னும் முயற்சிக்க
அடுத்தவருக்காய் அதிகம் யோசிக்க
செய்ய வேண்டியது
நிறைய இருக்க,
அதிகமில்லை நாட்கள்

காலன், வெற்று வானமும்,
தனிமை சாபமும் வைத்து
சிரித்துக் காத்திருக்கிறான்.

என்னை காக்கும் கடவுள்
நான் என் முன்னோர் போல
வாழ்ந்து காட்ட துணை நில்.
சக்தி கொடு.

Thursday, June 30, 2011

ஆபீசர்

புள்ளை பெத்து, ஒரு வீடு கட்டி
புள்ளைய கல்யாணம் செய்து கொடுத்து
இப்படி தான் ... ஆபீசருங்க இவங்க.

சம்பளம் வாங்கிப் பொழைக்கறவன்
concise definition.

Wednesday, April 27, 2011

பேருந்து Cellphone ஜன்னல்

Cellphone இடுக்குகளில் சிக்கியிருந்த
செய்திகளை எல்லாம் ஒவ்வொன்றாய்
படித்து முடித்தாயிற்று.

தேய்த்துத் தேய்த்து
அதன் திரை கைரேகைகள் அனைத்தும்
வாங்கிக் கொண்டது.

காதலியின் குரல் கேட்காத சில
நிமிடங்கள் அவளின்
குறுஞ்செய்திகளில் கழிந்தது.

சொல்ல ஏதுமில்லாது தவித்த
நேரத்தில் அருகிலிருந்தவன்
இருமல் விஷயமாயிற்று.

அழுக்குப் படிந்த ஜன்னலில்
வழிந்த மழைநீர்
முத்துக்களாய் பளபளத்தது.

கண்ணில் பட்டதெல்லாம்
புணிதமாயிற்று
காதலின் ஆசியினால்
Cellphone நினைவில்
அழிவிலாது வாழலாயிற்று.

தலை இருக்கையில் சாய்த்து
கண்கள் சொருகி
தூக்கமும் கனவும் மாறி மாறி
கடந்து போனது.

விழித்து கண்ட கனவில் அவளையும்,
மயங்கிக் கண்ட கனவில் Cellphoneயும்
மாறி மாறிக் கொஞ்சினேன்.

எனக்கு அழிவில்லை

விட்டு விட்டு இருமிக் கொண்டிருந்தேன் நான்.
பேருந்தில் அருகிலிந்தவன் அவன் காதலிக்கு
அனுப்பிய SMS காதல் கவிதைகளில்
நான் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

Wednesday, March 2, 2011

சுக மந்திரம்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பதிலாடுது என் மனமே
கனவுகளின்ன்ன்ன் சுயம்வரமோ
கண் திறந்தால்ல்ல் சுகம் வருமோ...
----
சுக மந்திரம்
மனதுக்குள் பாட.

Wednesday, February 2, 2011

இறை வணக்கம்

காலை மலர்ந்தது தாயே
குளிர்ந்து மயங்கிய கண்கள்
விழித்து தீர்கம் காண சக்தி கொடு

அயர்ந்து மூடிய காதுகள்
மனம் சிதறாது செயல்புரிய
வேண்டாத சத்தங்கள்
எட்டாதிருக்க சக்தி கொடு

சுருக்கங்கள் ஏறாது என்
நெற்றி நினைவு சிதறாது
சிந்திக்க சக்தி கொடு

எட்ட முடியா நிலை தொட
அயராது உழைக்கும்
அசையாத சிந்தை கொடு

தொலை தூரம் நெடுங்காலம்
நிலைக்கும், பலர் உளம்
குளிரும் காரியம் மட்டும்
செய்ய, நல்லது செய்தான்,
நன்கிருக்கட்டும் என்று
தொட்டவரெல்லாம் வாழ்த
என் புகழ் ஓங்க சக்தி கொடு

உற்றவரெல்லாம் மனமகிழ
குடும்பம் செழிக்க
பிள்ளைகள் மனம் பதமாய்
வளர, எனக்கு சக்தி மிக
வேண்டும்.

பரிபூரணமாய் எனக்கு அருள்
புரி தாயே !

Monday, January 24, 2011

Stay grounded

When you are feeling very good and imagining stuff that may not be real. When you are trying to appreciate yourself too much and expect it will happen from others. When you think you are better than anyone or richer than anyone. Especially, when you are angry at someone.

Make a list of incidents in the past where you failed. It can be fair or unfair but make sure you list it down. Write instances where you missed fulfilling a duty or did not pay attention or did not meet a goal or did not win. Write down instances where people went away from you. Write down instances where you hurt somebody. Write down instances where you cheated. Write it in coded words that you can understand well, but will be ambiguous to others and retain it.

When the list is ready, read it.

On the other hand.

When you are felling bad about yourself, when you are down. When you do not have enough energy in your body. When you feel beaten up, cheated. When you feel depressed, lost and have no hopes of tomorrow. When you cannot get out of a worrying thought. When anything you do is not making you face tomorrow.

Make a list of appreciations you got in the past. Even if many people were part of it, write about something you did and the good intention behind it. Write the list of people who feel good to be with you. Write about an act you did that helped somebody. Write about situations you defused and made people happy. Write about things you are proud about yourself.

Read it when its ready.

Surprisingly, the list of things we worried about are not so bad and the list of things we did good are worth living for. Invariably we would have stopped following something good we used to do. Stay grounded. Stay good. It pays back without fail.

Wednesday, January 19, 2011

கேட்டதில் பிடித்தது

பெரிதினும் பெரிது கேள்
                                                    - பாரதியார்

If you work more than what you are paid;
A day will come when you will be paid more than you work for.

Ah, but a man's reach should exceed his grasp. Or what's a heaven for?
                                                     - Robert Browning

Tuesday, December 14, 2010

கடவுள்

வற்றாயிருப்பு
பேரறிவு
காலம்.

கடவுளுக்கு பேரறிவு இருக்கிறது
என்றில்லை; பேரறிவு தான் கடவுள்.
காலம் தான் கடவுள்.
வற்றாயிருப்பு தான் கடவுள்.

Monday, December 6, 2010

சுகம் - 1

பேட்டரி தீர்ந்து போன கடிகாரம்
தரும் சுதந்திரத்தில்
நீளும் காலைத் தூக்கம்.

Monday, November 8, 2010

தாத்தா பாட்டி

எப்போதாவது கொஞ்சம் இருமல்,
அட்டையில் தைத்த விசிறியின் காற்று
ம் ... என்று கடந்து போன ஒரு
நாழிகைக்கு அங்கீகாரம்
தரும் பெருமூச்சு.

என்று,

வீட்டின் மூலையில் அவர் குரல்
எதிரொலிக்கிறதோ !
அதே சோபாவில்
இன்றும் அமர்ந்திருக்கிறாரோ !

சலனமற்ற அமைதியில்
அந்த வீடு, பக்கத்தில் வேம்பு.
நீண்டு வளர்ந்த பெரிய
வாழ்க்கையின் சின்ன
அடையாளங்கள் அங்கொன்று
இங்கொன்றாய்.

கடிகாரம் மாட்டிய ஆணியில்
இன்று அவர் புகைப்படம்.
மலர்ந்தது, உதிர்ந்தது
என்று இரண்டு தேதிகள்.

மகன், மருமகள், பேரன், பேத்தி
கண்டு, வலய வந்த
பாட்டி மட்டும் இன்று
தாத்தா இல்லாத வீட்டில்
மீதமிருக்கும் அவர் தடையங்கள்
அனுபவிக்க வந்து போகிறார்
விருந்தாளி போல.

அழுத்தமாய் பார்க்கும்
அந்த கண்கள் இல்லாத அந்த
வீடு, இன்று வெறுமையாய்,
கனமாய்.

Friday, October 29, 2010

அளவுகோல்

படி, அடி, மூட்டை என அளந்து பார்த்து
வாங்கப்பட்டது வாழ்க்கை;
 உருப்படி எத்தனை என்று குழந்தைகள்
கணக்கிடப்பட்டது;
 தாள்களை எண்ணி மனிதனின்
தரம் பிரிக்கப்பட்டது;

தராசுகளிலும், அளவு கோளிலும் சிக்காது
நின்றன உன்னதமாய் சில உணர்வுகள்

செல்லாது, செல்லாது என்று தூர
தள்ளப்பட்டது.

சுட்டெரிக்கும் நியாயங்களுக்குள்ளும்,
"இப்ப ஆகிர செலவுக்கு ... " என்ற வாக்கிய
வட்டத்துக்குள் சிக்காதவைகள்
புரியாது போன இந்த சரக்குகள்.

தினை விதைத்து அறுவடை செய்தவர்
ஒரு புறம் இருக்க,
வினை அறுவடை செய்தவர்கள்
வியந்தார்கள், எனக்கு ஏன் இப்படி எல்லாம்
ஆச்சு என்று.

ஐயா, உங்கள் அளவுகோள்கள் பற்றி கொஞ்சம்
போசனும் ... சரி விடுங்க, இதெல்லாம் விதி.

Monday, September 27, 2010

துணுக்குகள்

என்னைப் போலிருப்பதாய் என் மகள்
திட்டப்பட்டாள். நான் இப்படியா இருக்கிறேன்
என்று என்னைத் திட்டிக் கொண்டேன்.

மீண்டும் நிலைநிறுத்த முயன்றேன் என்
வாழ்க்கைக்கு, யாரோ வைத்த இலக்குகள் நான்
எட்ட முடியாது போன நாளிலிருந்து.

Tuesday, June 1, 2010

தமிழ்

என் பாதம் குளிர வைக்கும் பாசிப் படிக்கட்டே
கருப்பு மீசைகள் வழுக்கைத் தலையும்
வெற்றிலை சிவந்த வாயில் தவழும் அழகே
செதுக்கி முதல் வரும் நினைப்பின் இயல்பு
பிரதிபலிப்பே.

சொல்லச் சொல்ல இனிக்கும் தமிழே

You know, I miss you.

Wednesday, March 31, 2010

அம்மா

ம்ம்ம்மா ...
என்று குரல் எடுத்தது அந்த பொடிசு.

பையனை day-care ல் விட்டு அவசரமாய் அவன்
கண்ணிலிருந்து மறைய முயன்றாள்,
ஒட்டிய உடையில் உதட்டுச் சாயமும்
தோளில் பையுமென
அந்த நவ நாகரீக அம்மா.

அவன் அழுவது பொருக்காது
கண் சுருக்கி, முகம் வாடினாள்.

வேறு வேலையாய் அங்கே வந்திருந்த
15 பெற்றோரும் சேர்ந்து வாடினோம்.

Saturday, February 27, 2010

அடர்த்தி

3 - 10 குடும்பங்களின் 1000 சதுர அடி மண்ணில்
120 மனிதர்கள் 300 சதுர அடி பேருந்தில்
400 மனிதர்கள் 4000 சதுர அடி திரையரங்கில்
4 மனிதர்கள் 12 சதுர அடி ஆட்டோவில்

வீட்டில், ரோட்டில், க்யூவில், நடைபாதையில்
அடுகடுக்காய் எவ்வளவு அடர்த்தியாய்
அடைக்க முடியுமோ அவ்வளவு அடர்த்தியாய்.

நேராய் அன்னாந்து பார்த்தால் சின்ன சதுரமாய்
வானம். அதில், நட்சத்திரங்களுக்குப் பதில்
குறுக்கும் நெடுக்குமாய் விமானங்கள்.
கிழக்கும் மேற்கும் புரியாத அடர்த்தியில் சுவர்கள்.
மண் எட்டாத சமதள தரைகள் கொண்ட வீடுகள்.
குளிர்ந்த கண்ணாடிகள் தாண்டி மட்டும்
அனுபவிக்கப்படும் சூரியக் கதிர்கள்
நின்ற இடத்திலேயே ஓடிப் பழக,
வியர்த்தது உடன் மறைய குளிரூட்டப்பட்ட
உடற்பயிற்ச்சி கூடங்கள்.

1000 ஏக்கர் காட்டில் வெறும் 100 பேர் மட்டும்
மண் பட கால் பதித்து ஓடித்திரிந்து வாழ்ந்ததெல்லாம்
எப்படி மறந்தோம்.

Monday, December 14, 2009

ஜனனம்

வயல்கள் அதிகம் இருந்த ஊரிலிருந்து வந்தவனை
மெயின் கிராஸ் களாலான பெங்களூருக்கு
அறிமுகம் செய்தேன்.

சகதி நிறைந்த மார்கெட்,
வாழை இலை நறுக்கி விற்கப்படும் சந்தை
கற்களால் செய்த நடைபாதைகள் வழியாக
போக வேண்டிய இடத்திற்கு கூட்டிச் சென்றேன்.

பார்த்துப் போ, கவனமாய் இரு, சொல்லிட்டுச் செய்,
என்று நான் கூரியதெல்லாம் அவன் காதில் விழுந்தாய்
தெரியவில்லை. இந்த நகரம் ஒரு பெரிய இயந்திரமாய்,
அதன் உள்ளே ஓடும் சக்கரங்கள் அவனை ஈர்ப்பதாய்
கை நீட்டிப் போனான்.

ஏதோ ஒரு நகருக்கு நானும் இப்படி அடிமையானதை
நினைத்து எனக்குள் சிரித்தேன். அவனைப் பற்றி பிறகு
நான் நினைக்கவில்லை.

நான் கடிந்ததற்காய் இன்றும் என்னிடம் சொல்லிவிட்டுப்
போகிறான் ஊருக்கு. நகரத்தை விட்டுப் பிரியும்போது
மட்டும் நான் சொன்னதெல்லாம் அவனுக்குள்
எதிரொலிக்கிறதோ என்னவோ.

உனக்கு இவனை தாரை வார்த்து விட்டேன். பார்த்துக்கொள்.

Wednesday, October 7, 2009

நீ ஊருக்குப் போ

... என்று அதட்டினாள் அழுது
அடம் பிடித்தவளைப் பார்த்து.
சாப்பிட, தூங்க, சட்டை போட என்று
ஒவ்வொரு முறையும் குறும்புக்கு இதே
மிரட்டலாய் சொல்லப்பட்டது.

நான்கு சுவர் தாண்டி ஓடி விளையாடட்டும்
பாவம், அவளுக்கு இங்க என்ன செய்யனும்னே
தெரியலை என்று காரணம் காட்டப்பட்டது.

பயணச்சீட்டு, கூட்ட நெரிசல் என, எல்லாம்
யோசித்து, நாள் குறித்தாயிற்று.
யார் எங்கே எப்போது பார்த்துக் கொள்ள
வேண்டுமென்று அட்டவனையிட்டு அறிவித்தாயிற்று.

குறித்த நாளுக்கு முன்னிரவு.
ஏங்க அவளை அனுப்பித்தான் ஆகனுமா ...
என்று இழுத்தாள், மகளைப் பிரிய முடியாமல்.

கரடி பொம்மை

அப்பொழுதெல்லாம் அவள் இடுப்பிலேயே கிடந்த
அந்த கரடி பொம்மை, ஒரு நீண்ட விடுமுறைக்குப்
பின் அடையாளம் மறந்து விசில், ஆட்டோ,
புத்தகங்களுக்கு மத்தியில் சாமானியமாய் கிடந்தது.

எனக்கு தான் ஏனோ பொக்கென்று
இருந்தது அதை பார்க்க.

Tuesday, July 28, 2009

மூனு இலைக்கு மேல்

வாழ்க்கை கோடுகள் கூட வந்தவர்களிடமிருந்து
தள்ளி கூட்டி வந்து விட்டது
ஒன்றாய் சைக்கிள் ஓட்டிய போது அவனுக்கும்
எனக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தோண்றவில்லை

இப்பொழுது தள்ளி இருக்கிறான்
மனதில் பதிந்த அந்த முகம் வேறு எங்கோ நகர்ந்து
கொண்டிருக்கிறது.

எப்பொழுதுமே ஏதாவது சொல்ல முடிந்த நாட்கள்
போய் அவன் வாழ்க்கையை பற்றி ஒன்றுமே
புரியாது பார்கிறேன். அவனைச் சுற்றி தேவைகள்
மொத்தமாய் வேறாய்.

எங்கள் கோடுகள் தள்ளி வந்து விட்டது.
அவனுக்கு மகளில்லை, என் வீட்டில் வேலைக்குப்
போகிறார்கள். நான் இங்கே கால் ஊன்ற நினைக்கிறேன்.

முளைத்து மூன்று இலைக்கு மேல் நிச்சயமாய்
பார்க்க நிறைய இருக்கிறது.
ஒரு இலைக்கு பத்து வருட கணக்காயிருக்க வேண்டும்.

Sunday, June 28, 2009

கேட்டதில் பிடித்தது

தானாய் கிடைத்த அன்பில் என்ன அம்மா சுகம் இருக்கிறது;
போரடிக்கிடைத்த அன்பில் தானே சுகம்.

1960 களில் வந்த தமிழ் திரைப்படத்தின் வசனம் இது.
இதை விட தமிழனின் கலாச்சாரத்தை சுருக்கமாய் சொல்ல முடியாது .

மேற்கத்திய சிந்தனைகள், வெற்றி என்பதை முன்னிருத்தினாலும்,
அன்பை வெல்லுவதை சொல்வதாய் நான் இதுவரை பார்கவில்லை.

Wednesday, May 20, 2009

தெருநங்கை

நாம் பார்க்காத நிழல்களில் இயங்கும் உலகின் ஒரு பரிமாணம் என்னைத் தொட்டுச் சென்றது. சட்டத்தின் விளிம்புகளில் வரையரைக் கோடுகள் அவ்வளவு நேர்தியாய் இருப்பதாய் தெரியவில்லை.

பெங்களூர், கம்பெனி வண்டிகள் மாலை வேலை முடித்துத் திரும்பும் போது சில்லரை சேர்க்கப் பொது மக்களை ஏற்றுவது வாடிக்கை. மழைக் குளிரில் அவசரமாய் கிடைத்த வண்டியில் அமர்ந்தேன். 11 மணி நேரப்பயணம் தந்த இறுக்கம், இன்னும் சிறிது நேரத்தில் வீடு என்ற லேசான சந்தோஷம். யாரோ அவர் தொழிலாளர்க்குச் செய்து கொடுத்த சொகுசு நான் இன்று அனுபவிப்பதாய் எனக்குள் உருத்தல்.

முழுவதுமே ஆண்களாய், அமைதியாய் 10 பேர், இப்போது கிளம்பிவிடும் வண்டி என்று அவரவர் சிந்தனை உலகத்தில் எல்லோரும் சென்றாகிவிட்டது. என்னருகே ஒரு காலி இடம்.

மலர்ச்சியாய் ஏறினாள் அந்த திருநங்கை. நேராய் வந்தமர்ந்தாள் என்னருகே. மனிதராய் பாருங்கள் என்றும், சொல்ல முடியாத துன்பம் தாங்குகிறார்கள் என்றும் பரிதாப அலைகள் அதிகம் வீசும் காலத்தில், இயல்பாய் தானிருந்தேன். அவளுக்கு இடப்பக்கம் நானிருக்க, வலப்பக்கம் இருந்தவன் தோளில் சாய்ந்தாள். ஆர்வமாய் சில கேள்விகள் கேட்டாள். சற்று தயங்கி பின் பதில் சொன்னான்.

எழுந்து கொள்ளலாமா என்று யோசித்து சிறிது தயங்கினேன், நான் நினைத்ததாய் இல்லாமல் போனால் அது காயப்படுத்துமே என்று. என் முறை வந்தது. என் தோளும் சரி பார்க்கப்பட்டது. என் மலிவு விலைச் சட்டை நன்கிருப்பதாய் பாரட்டப்பட்டது. எதற்கும் பதிலலிக்காமலிருந்ததால் என் மொழி என்னவென்று விசாரித்தாள். தெலுங்கா, ஹிந்தியா, கன்னடாவா, தமிழா, ஆங்கிலமா, உருதுவா ... அவள் கடைசியாய் கேட்ட மொழி எது என்று புரியவில்லை. மெளனம் காத்தேன். இன்னும் வீடு வர நேரமிருப்பதால் எழுந்து தூரப்போய் நின்றேன்.

சிறிது நேரத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது, என்னை கடந்து செல்லும் போது வருகிறேன் என்றாள் புன்னகைத்தபடி. சங்கடம் விலகியதாய் ஆசுவாசமானேன். வருத்தமாய் இருந்தது.

Tuesday, May 12, 2009

ரோமியோ

அவனுக்கென்ன...
கலைத்துப் போட்டு பார்க்கிறான் வாழ்கையை.
பிடிக்காத போது, தொலை தூரம் செல்கிறான்
பழகாத முகம் பார்த்து நட்பு வளர்கிறான்.

இதில் சில நாள் அதில் சில நாள் என
செளகரியத்திற்கு வார்த்துப் போடுகிறான் அவன் நாட்களை

கவிதை பாட என்று ஒரு காலை
அமைதி அனுபவிக்க ஒரு குளக்கரை
அயர்ந்து தூங்க ஒரு மரக்கிளை
புல்லாங்குழல் வாசிக்க ஒரு இடம்.
தச்சு வேலை செய்ய ஒரு வீடு
ஓவியம் தீட்ட சில முகங்கள்
ஆருடம் சொல்ல சில கவலைக்காரர்கள்
விளையாட சில தோழர்கள்
வஞ்சமென்றும், கோபமென்றும் பார்க்காத விரதம் இல்லை
தட்டிக் கேட்டு சண்டை பயிலவும் சில முரட்டுக் கைகள்

வளர எந்த உந்தலுமில்லை, ஆயினும்
முதிர போகும் பயணமிது
பல வாசங்கள் முகர்ந்து பார்க்க
விளையாட்டுக்கு திரியும் இளங்கன்று போல்

எல்லாமே சொந்தம்.
உறவு வளர பயமில்லை முதல் காதல் போல்
இரவெல்லாம் கண்விழித்து
புன்னகை தரிக்கிறான்.
பிரிந்த போது கண்ணீர் சிந்தி பறக்கிறான்.

எங்கோ சென்று ஏதோ செய்ய
சுதந்திரம். மண்ணில் நட்டு வைக்கவில்லை
எதையும். காற்றில் அலையும் காகிதம்.

சுகம் மட்டும் தேடும் சுகவாசி.
மிடுக்காய் அலையும் சன்னியாசி.

Wednesday, May 6, 2009

டாடி

எங்கோ யாரோ கூப்பிட்டது கேட்டு
டாடி என்றாள் என்னை.
இதிலாவது தமிழிருக்கட்டுமென்று
பலருக்கு கூறியது நினைவுக்கு வந்தும்
இரண்டரை வயது மழலை மனதில்
பாசமாய் வந்த வார்த்தை
மாற்ற மனமில்லை ...
ஆனால்,
விடுவதாயில்லை மகளே.
அப்பா அப்பா தான்.

Wednesday, February 25, 2009

கனா

இரவின் மை தாண்டிய சின்ன நிலவொளி
பாறை புல் எனப் பிரித்து உணர முடியாத நிலப்பரப்பு
கைகள் உயர்த்தி காற்றில் மிதக்கும் கனா

என்னை தழுவி காற்றில் மிதக்கும் மென்மைத் துகில்
ஒடுங்கி கீழே இறங்கி நீர் பரப்பில் கால் உந்தி
உயர எம்பி சிறகு விரித்து காற்றில் சறுக்கிப் பயணம்
இந்த நிலம் என் மனமாய், உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆர்பரிக்கும் கடல் என வகை வகையாய் என் நினைவுகள்.

வேகம் குறைத்து கடற்கரை மனலில் கால் பதித்து
தளர்ந்து விழுகிறேன்; சற்று முன் அடித்த பெரிய அலையின்
வேகம் வாங்கி மெல்லிய ஈரமாய் என் அடியில் நகரும் மனல்

தெளிந்த வானம், தூரத்தில் எங்கோ, பூமியோடு வானம்
இடியிட்டு சிணுங்கித் திரிகிறது.
திண்னை வயப்பட்ட கிழவன் வீசும் விசிறி வேகத்தில்
கடல் என்னை நோக்கி தண்ணீர் அலை வீசுகிறது

கையில் மனல் அள்ளி திருப்பி தளர விட,
ஒவ்வொரு துகளாய் சரிந்து விழுகிறது
மனலின் ஈரம் கொடுக்கும் உணர்ச்சி உணர்ந்து
புரண்டு படுக்கிறேன், கன்னங்களில் மனல்
குருணை உணர்ந்த, கைகள் மனல் பரப்பை வருடுகிறது

குறும்புச் சிறுவன் போல் ஒரு அலை மெல்ல
அடி எடுத்து என் பாதம் தொட்டு தனக்குள் சிரித்து
திரும்புகிறது.

என் நினைவுகள் எல்லாம் என்னை அழுத்துவது போல்
நிலத்தோடு நிழலாய் ஒட்டி கிடக்கிறேன்
எத்தனை அலைகள் அதன் பின் அடித்ததென தெரியவில்லை
அயர்ந்து மறைந்தேன்.

Tuesday, January 6, 2009

முப்பது

முழுமை.
சுதந்திரம் பொறுப்புடன்.
நான் இப்பொழுது சமுதாயம்.
சாமான்யன்.
நடுவயது.
இன்னும் இளவட்டம்.
வேலையும் செய்யும் மேலாளர்.
அப்பா.
குடும்பத் தலைவன்.
பக்கத்து வீட்டு மாமா.
இடம் பெயர்ந்த தமிழன்.
குடும்பஸ்தன்.
சம்சாரி.

Monday, January 5, 2009

ஆத்மா

நெஞ்சுக்குள்ளே நடுவில் ஒன்றரை அடி நீளம்,
உருண்டையாய் மேலும் கீழும் சற்று கூராய்
அநேகமாய் இருப்பது தெரியாது

ஆள் அல்ல முகம் வைத்து அடையாளம் சேர்த்து
நினைவில் கொள்ள
குணம் என்று இல்லை நல்லது கெட்டது கற்பிக்க

பரமாத்மாவின் பரிமாணமாய் இந்த ஆத்மா
இருப்பதாய் கேள்வி. அது எப்படி நானாகிறது
அழுத்தமாய் மட்டும் உணரலாம். மனது
பதறுகிறது, எதை பற்றி உய்பதென்று தவிக்கிறது.

அமைதியாய் ஆத்மா, ஜோதியாய்,
அதிக நேரம் தரிசனம் இல்லை. மனம் மீண்டும்
வெல்கிறதோ.

Friday, December 19, 2008

காணாமல் போனவன்

வாடிக்கையாய் நடந்து வரும் வீதிகள்; கடைப் பலகைகளின் கரைகள் கூட நன்கு பரிச்சயமாய் தோண்றும் என் நகர். இன்று எதுவும் மாற்றமில்லை, சற்று அழுக்கான என் ஷு, ஒரு முரையோ இரு முரையோ போட்ட சட்டை, காலை பேப்பர், எல்லாமே. நடை பாதையில் கால்களின் தாளத்தை பார்த்த படி வெற்று மனதுடன் நடந்திருப்பேன். வியர்த்த அளவு வைத்துப் பார்த்தால் 2 கி.மி இருக்கும். எங்கிருகிறேன் என்று புரியவில்லை, வீடு செல்லும் வழி தெரியவில்லை.

மகன், மருமகள், அம்முவின் பெயர்கள் தவிர வேறு எதுவும் நினைவில் தட்டவில்லை. ஏதோ மெயின் ஏதோ கிராஸ் என்று வரும். உச்சி வெயிலில் கிழக்கு மேற்கு பார்க்க முடியவில்லை. நகரம் முழுவதும், சாப்பிட்ட களைப்பில் லேசான மந்தமாய், சாலைகளில் அவ்வளவு சலசலபில்லை. நான் இப்பொழுது பயப்பட வேண்டுமா ?

அதோ அந்த திருப்பம் தாண்டினால் மெயின் ரோடு வரலாம். கால்களின் தாளம் லேசாய் வேகமாகக் கண்டேன். இபோழுது வியர்வைக்கும் நடந்த தூரத்திற்கும் தொடர்பு இல்லை. திருப்பம் தொட்டு வலப்பக்கம் முட்டுச் சந்து, இடப்பக்கம் இதே போல் எங்கோ பாதை வெகு சிரத்தையாய் கொண்டு செல்கிறது.

தொலைந்து விட்டேன். தொலைத்து விட்டேன்.

கடைப் பலகையின் கரைகள் என்னை பார்த்து சிரிப்பது போல். அம்மு குட்டி மாதிரி. எல்லா இடங்களிலும் அவை ஒரே மாதிரி தான் இருக்கின்றன. கண்கள் பரிச்சயமான வடிவம் எதாவது கிடைக்குமா என்று தேடுகிறது.

ஒரு கடையின் வாசற்படியில் அமர்கிறேன். லேசாய் பதற்றம் மனதில், நிற்க முடியவில்லை. சட்டென்று கண் மூடி வீட்டில் என் ஆசை சாய்வு நாற்காலியில் விழித்துக் கொள்ள மாட்டோமா.

எழுந்து நடந்தேன், சில திருப்பங்கள் தாண்டி, சில பலகைகள் தாண்டி, பலரின் கை காட்டலுக்கு இனங்கி, இன்னும் தொலந்து தான் போயிருக்கிறேன். பதற்றம் குறைந்து விட்டது, சற்று கவலை கால் வைக்கிறது.

கடந்து போகிறவர்கள் எல்லாம், இன்று ஏனோ வெகு அன்னியமாய். எல்லா மனிதர்களின் முகத்திலும் ஒரே உணர்ச்சி. உணர்ச்சியற்ற உணர்ச்சி. சர் சரென்று வாகனங்கள் ஏதே அவசரத்தில். நெற்றியில் கை கொடுத்து தலை மயிர் கால்களை இழுத்துப் பார்கிறேன். தொலைந்து விட்டாயே.

அயிரமாயிரம் மக்களுக்கு நடுவே நான் தனியாய். பாதுகாப்பாய் தோண்றும் பொது ஜனம் இன்று பயமுறுத்தும் தோற்றங்களாய். ஷுவில் ஏதோ பட்டு விட்டது, வீடு சென்றதும் துவைத்துப் போட வேண்டும். வீடு !

புரியாத மொழியில் எழுத்துக்கள், பெயர் பலகைகள், பேருந்துப் பலகைகள், தெருப் பலகைகள். உதவ வரும் மனிதர்கள் சிலர் கோபம் கொள்கிறார்கள். என் நினைவு தெளிவாய் இல்லையே. கையிலிருக்கும் பத்து ரூபாய் போதுமே நான் வீடு சென்றிருப்பேன். அந்த நகர் பெயர் மட்டும் எட்ட மறுக்கிறது. வயது தந்த பரிசு மறதி, தளர்ச்சி.

கால்கள் இன்னும் கொஞச தூரம் நடக்கும். அதன் பின். வயிற்றின் கோரிக்கையை ஏற்று, 7 ரூபாய் செலவு செய்கிறேன். அம்முவுக்கு ஒரு மிட்டாய் வாங்கலாமா. கையில் இருக்கும் இரண்டு நாணயங்கள் என்னை பரிதாபமாய் பார்ப்பதாய்.

இந்த மனிதர்கள், பரிச்சயமில்லாது, கடினமாய், நகரத்தை செலுத்திக் கொண்டு. நகரம் ஒன்றும் புதிதில்லை. ஆனால் இன்று என் பார்வையில் அனைவரும் புதியவராய். 15 நிமிடங்களாய் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சக மனிதனை கவனிக்காத ஒரு பழக்கம். என் வேலை. என் உணவு. என் பாதை. அதுவும் 2 அடி மட்டும்.

Friday, November 14, 2008

எனக்கே எனக்காக

அறையின் மூலையில் கண் பதித்து
கனவு கண்ட காலம் அது
என் மனம் போகும் பாதை சரியா என்று
புரியாத வயதது.

காலையின் எழுந்து எங்காவது சென்று எதையாவது
பயின்று வருவது என்ற வாடிக்கை மட்டுமே பார்த்த பருவம்.

இன்று நாற்காலியின் வடும்பில் தலை சாய்த்து
கண் முன் தெரியும் கூரையில் ஆயிரம் கனவுகள்
பிரதிபலிக்கிறேன், வேகமாய், மிக வேகமாய்
காட்சிகள் மாற, பல யோசனைகள், யுத்திகள்.

கட்டுக்கடங்காது சித்திரங்கள் வளர்ந்தும் எதை
செய்ய எதை தள்ள என்று எங்கோ ஒரு முதிர்ச்சி
வளர்ந்ததாய் ஒரு தன்நம்பிக்கை.

சொல் பேச்சு மட்டும் கேட்டு வந்த சிறுபிள்ளை மனம்
தானாய் கால் நீட்டி, நடை பயிலக் கற்றது காண்கிறேன்
தள்ளாட சட்டென்று நீட்டிப் பிடிக்க, சாய்ந்து அழ,
இன்னும் சில கைகள், தோள்கள் தேடிய போதும்,
எங்கோ ஏதோ ஒரு திர்க்கம்.

முரட்டு தான்-தோண்றித்தனம், சற்று கைக்கு அடங்கியதாய்.

மீசை முளைத்ததை தடவிய வயதுக்கு இன்று போய்
என்னையே சந்தித்து, ஒரு செய்தி சொல்ல ஆசை.
எதிர்காலம் உனக்கு மிகுந்த சுகம்,
நீ கண்ட கனவுகள் நனவாகும், நீ சந்தேகத்துடன்
பயின்ற சில உணர்வுகள் மட்டுமே நாளை உன்னை
கைதூக்கும். தலை கோதி அந்த சிறுவனின்
களங்கமில்லாத கண் பார்த்து நெற்றியில் முத்தமிட்டு
சொல்ல ஆசை.

நீ நடக்க கற்றுக் கொள்வாய், உன் அமைதி இன்னும்
ஆழமாகும், உன் மனம் கரையும் நிமிடங்கள் வரும்.
நீ வைக்கும் அடி சரி. எடுத்து வை, நானிருக்கிறேன்.

Friday, September 26, 2008

போக்குவரத்து இல்லை

எங்கள் வட்டாரச் சொற்றொடர்;
இதயங்களை இணைக்கும் சாலையில் போக்குவரத்து இல்லை
பொருள் இல்லாமல் இருந்த நாளில் கூட இருந்த வரத்து
சொகுசு பெற்ற நாளில் இன்று இங்கு வரவில்லை

தனியாய் இருவர் போடும் சண்டையில்
இரு குடும்பங்களுக்குள் போக்குவரத்து இல்லை
ஒவ்வொரு இதயமும் ஏங்க ஏனோ
அந்த சாலையில் போக்குவரத்தே இல்லை

படித்தவர் படிக்காதவர் என்று பாகில்லாமல்
நினைத்ததும் நிறுத்தப் படும் சாலை இந்தச் சாலை மட்டும்
சில ஆண்டுகளில் ஏக்கப் பெருமூச்சுக்கள் ஆங்காங்கே
அதிகமாக, சில வரட்டு கவுரவங்கள் போட்ட தடுப்புக்கள்
உடைக்கப் படுவதே இல்லை

தனித் தனியாய் நல்லவர்கள் மட்டுமே வாழும் இரு குழுக்கள்
பேச்சுவார்த்தை மட்டும் ஏனோ நடக்கவில்லை
சாலையோரம் இரு புரமும் தள்ளி நட்ட மரம் கூட கை தூக்கி
தன் சகாவின் கை கோர்க்கும் சாலையின் மேலே
அந்த நிழல் காட்டும் பாடம் புரியவில்லையா

இருவரும் கை நீட்டித் தான் தொட முடியும்;
இருவர் கை கோர்த்துதான் சிரிக்க முடியும்;

Monday, September 15, 2008

வேற்று கிரக வாசிகள்

இது ஒரு வழக்கமாகி விட்டது
நரை ஓடிய பெற்றோர்
தம்பதியராய் அமர்ந்து
புது மனை புகு விழா நடக்கிறது

வேற்று கிரகதிலிருந்து தொலைபேசி
அழைப்பு, எல்லாம் நன்றாக நடக்கிறதா,
யார் யார் வந்திருக்கிறார்கள்,
சரி பிறகு அழைக்கிறேன்.

வாங்க மாமா, வாங்க அத்தை,
வாடா மச்சான், அய் குட்டி சட்டை சூப்பர்
என்று, வாய் நிறைய வரவேற்று,
என் இடம் இது, நான் நன்றாய் வாழ
நீங்கள் வாழ்த்துங்கள் என்று
பொரியவர்கள் காலில் விழும் சுகம் ...

புதிதாய் வாங்கிய மனையில் அமர்ந்து
இயற்கைக்கு நன்றி சொல்லி
மன் பிளந்து, பாறை பிளந்து செய்த பாவத்திற்கு
மன்னிப்பு கேட்டு, தெய்வத்தை வணங்கி,
வீட்டை கோவிலாக்கும் சடங்கு செய்து
புல்லரித்து அன்று அங்கு தனியாய் உறங்கும்
சுகம் ...

சுவரின் ஈரம் முகர்ந்து,
இங்கு என் பிள்ளை விளையாடுவான்,
இங்கு என் மகள் கோடு கிழிப்பாள்,
இங்கு என் மனைவி கோலம் போடுவாள்
இங்கு எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சிரிப்போம்
என்று தனக்கு தானே சிரித்து பிரம்மிப்படையும்
அந்த முதல் நாள் ...

(பெருமூச்சு ...)

Monday, September 1, 2008

Biodata

வயது: 2 (கிட்டத்தட்ட)
பற்கள்: 12 + (4 * 1/2)
சமீபத்திய சாதனை: "அப்பய்யா" என்று கூறி வந்தது - open your mouth என்று தெளிவாய்
நீண்ட கால சாதனை: ஓயாது பேசுவது, தெளிவாய் குழப்புவது
சமீபத்திய எரிச்சல்: போராடிக் கிடைத்த vicks கண்ணீர் வரவழைத்தது
நண்பர்கள்: பவ் பவ் என்று அழைக்கப்படும் இரண்டு கரடிக் குட்டி பொம்மைகள்
விரும்புவது: காலணிகள்
விரும்பாதது: உணவு, உடை
வேண்டுவது: கண்ணுக்கு தெரிந்து கைக்கு எட்டாதது அனைத்தும்;

அகராதி:

கொன்னம்மா - உட்கார்
அப்பாயி - அப்பா
பவ் பவ் - நாய்
ஹனினி - ஹரிணி
கம்பிட்ட - computer
சீயா - TV
பா பா ஷீப் - Ba ba black sheep
சாயி - சாவி
பாப்பாக்கு - எனக்கு
டயா - லயா
மந்ந்தன் - மதன்
டொம் போட்டிட்டு - டம் என்று (விழுந்து)
பெளிக்கு - வெளியில்
பலிக்கு - வலிக்குது
சாக்கு - socks
மானாம் - வேண்டாம்
மானா - மாடு
கன்னீ ... குட்டீ - கன்றுக்குட்டி
ஊக்கு - ஊருக்கு
கோயி - கோபி
பிங்க் - என்ன color கேள்விக்கான பதில்
டூ, தீ, செனன், எய்ட் - 1,2,3,4 ...
டூ, தீ - எத்தனை என்று ஆரம்பமாகும் கேள்விக்கு பதில்
மாமா கார் - அப்பாவின் கார் அல்லாத அனைத்தும்
மந்தா - மருந்து
முங்கது - முகமது
மஞ்சள் - மஞ்சு

Monday, August 18, 2008

freewill - destiny/புத்தி - விதி

நீ இத்தனை நொடிகள் தான் வாழ்வாய்;
இந்த நேரத்தில் இங்கிருக்க வேண்டும்,
இதைதான் நினைப்பாய், இவளைத்தான் மணப்பாய்
நீயே தான் செய்தாய் என்று நினைத்தாலும்
விதித்தது நடக்கிறது என்று ஒரு கருத்து

இது destiny - விதி.

ஒவ்வொரு நொடியும் என் கையில்,
ஒவ்வொரு செயலும் என் செயல்,
என் எண்ணம், என் திட்டம்.
நான் போகும் பயணம் நான் வகுத்த பாதையில்.
விதிக்கு இங்கு இடமில்லை. நான் வளைத்தால்
காலம் வளையும்.

இது புத்தி - freewill.

உண்மை இரண்டுக்கும் நடுவில்.
வினையின் பயன் உன் முன் நிற்கும் விதி,
விதியின் உத்வேகம் மீறி நீ செய்யும் செயல்
நீ ஆளும் புத்தி.

புத்தி கொண்டு நீ இன்று செய்யும் வினை நாளை உன் விதி.
நாளைய விதி உன் கையில் இன்று புத்தியாய்.

எதிர்நோக்கும் ஒவ்வொரு நொடியும் நீ செய்த வினையால்
மட்டுமென்று அமர்ந்திருக்க முடியாது
நீ இன்னாருடைய பையன், இவருடைய பேரன்,
உன் நட்சத்திரம், நாள், உணவு, இடம் ...
விதி நீ பயின்ற கணக்கில்லை. புத்தி கொண்டு
புரிவதற்குமில்லை.

உன் கையில் இருப்பது நீ இன்று செய்யும் வினை
மட்டும். விதைப்பது திணையென்றால், விதி மீதென்ன பயம்.

Thursday, April 10, 2008

புவியியல்

நிலம் கீறி வாசம் பார்த்தேன்,
நிமிர்ந்து தொடு வானத்தில்
அனிவகுக்கும் மலைகள் பார்த்தேன்

என் கண் படாது கிடக்கும் நிலத்தில் எல்லாம்
கால் வைக்க ஏக்கம் கொண்டேன்

விரிந்து கிடக்கும் கோரைப்புல் வெளி
அடர்ந்து குளிரும் அந்தக் கானகமும்
வெள்ளிப் பிரளயமாய் அருவியும்
நீர் வற்றி வரண்ட பாலையும் கண்டு
வர நினைத்தேன்

தனி மனிதனாய் ஏதுமில்லா உலகில்
கிடைக்குமா இந்த சுகம் இன்று
கரை தாண்டி நடக்கும் செய்தி
காதில் சேர தொலைக்காட்சி வேண்டாம்

நான் வாழும் பூமி நான் வருடி பழக
விரும்புகிறேன்; மந்தை கூட்டம் மிகுந்த
மனித வாடை இல்லா அந்த புனித பூமி
எனக்கு காணக் கிடைக்குமா.

ஆண் மகன் எனக்கு ஆவின் வேரில்
கண் மறைந்த ஒன்றை வென்று வருவதே
சொல்ல முடியா இன்பம் புரிகிறதா உனக்கு;

("There will be blood", படம் தந்த ஏக்கம்)

Monday, February 18, 2008

பொய் சொல்லலாகாது பாப்பா

கடினமாய்
பாறையாய்
முடிவாய்
அன்பிலாததாய்
உறைந்ததாய்
வெற்றிடமாய்
தோன்றும் ...

இந்த உண்மை
சொல்லச் சொல்ல

குளிர்ந்ததாய்
பவித்ரமாய்
துணிவாய்
நேர்மையாய்

என்னை மாறச் செய்யுதே.

Wednesday, January 23, 2008

மிருகத்தின் நிழலில்

முன்னங்காலில் மானின் கழுத்து அழுத்தி தன்
பசிக்கு விருந்து கிடைத்த சுகத்தில் அந்த புலி.
மொத்தமாய் சில உணர்ச்சிகள் மட்டுமே
அதற்குத் தெரியும். அது மிருகம். சுத்தமான மிருகம்.

புலி பரிணமித்து, முன்ணிரண்டு கால்கள் தூக்கி நிர்க்க
கற்றுக்கொண்டு, இன்று மீசை முளைத்த மனிதனாய்.
பரிசுத்தமான மிருகம் இன்றும் உள்ளே இருக்க
பரிதாபமான மனிதனாய் வெளியே தெரிகிறான்.

அன்பு என்று பிதற்றி கோரைப்பல் தெரியாது சிரிக்கிறான்
நட்பு என்று வேட்டை மறந்ததாய் நடிக்கிறான்
பாசம் என்று நகம் உள்வாங்கி கை கூப்புகிறான்
உண்மை என்று வால் சுருட்டி கண் படாது வைக்கிறான்

சொடுக்கிய நேரத்தில் கண் சுருக்கி பல் காண்பித்து
வால் நீண்டு, நகம் நீட்டி மிருகம் உருமுதே.

கடைத்தெருவில், ரோட்டில், கல்லூரியில், வீட்டில்,
வேடமணிந்து கிழ்தரமாய் ஒரு மிருகம் உலவுதே.
புலி போல் பரிசுத்தமாய் மிருகம் பார்கையில்
பயமில்லை. மனித தோல் போர்த்திய மிருகம் பார்க்க
நடுங்குதே.

ஓடித்திரிந்து வேட்டையாடி, மேய்ந்து தின்று
வாழ்ந்திருந்தால் வாழ்க்கை சுகமாய் இருந்திருக்கலாம்.
தெய்வத்தை தேடும் வேஷமிட்டு, நாளுக்கு நாள்,
மிருகத்தை மட்டும் எதிர்கொள்ளும் அவலம்
இந்த மனிதனுக்கு மட்டும்.

மான்களை ஏனோ நான் அதிகம் பார்ப்பதில்லை,
முதலை, புலி, நரி, பருந்து என்று வகை வகையாய்,
திரும்பும் திசை தோரும். வெறி ஊரிப்போய்
மாமிசம் தின்று மரத்துப்போய் காட்டு ஜீவனின்
கண்கள் மட்டுமே காண்கிறேன்.

தெய்வம் என்று உண்டு என்று ஏன் பொய் சொல்கிறாய்.

Wednesday, December 12, 2007

தங்க மகள்

2 அடி உயரமும் 2 கீழ் பற்களுமாய்
என் தங்க மகள்
குட்டி பொம்மைபோல் வீடெங்கும் திரிகிறாள்
ஏதோ ஞாபகம் வந்தது போல் எனை பார்த்து சிரிக்கிறாள்

கரடிக் குட்டியும் கத்தும் வாத்தும் அவள் தேசம்
கத்தும் நாய் உலக அதிசயம்
நான் கடிந்தாலும் அழுது கொண்டு என்னிடமே
ஆறுதலுக்கு வரும் பஞ்சுப் பதுமை

வார்த்தைகள் இல்லா மொழியில் ஓயாது கதைக்கிறாள்
கோபம் வந்து ஏசுகிறாள்.
உரிமையாய் தோள் ஏறி, ஒய்யாரமாய் சவாரி;
அவள் கை நீட்டிய திசையில் என் கால்கள்

சிரிப்பும், கோபமும், அழுகையும் ஆனந்தமுமாய்
அழகான குணத்தவளாய் அவளே வளர்கிறாள்
என் சிறிய வீட்டில் ராஜாங்கம் நடத்தும்
என் சிட்டுக்குருவிக்கு என் செல்ல முத்தங்கள்

Wednesday, October 3, 2007

அமைதியின் எதிர்பதம்

வேடிக்கை பாருங்கள்,

அமைதி என்று பதம் உண்டு,
எதிர் பதம் அமைதியின்மை.
அமைதியின்மை எத்தனையோ நிலைகள்
உற்சாகம், கோபம், வேகம் ...

எந்த ஒரு நிலையும் அமைதியின் எதிர் பதமே
அமைதியாய் மனதிருக்க எதிலுமே அதற்கு நாட்டமில்லை
சிரு நன்மை செய்யக்கூட சிரிதளவு கோபம் தேவை
அந்த அளவில் அதை கோபம் என்றா சொல்வோம் ?

இந்த அமைதி பழகுவது எப்படி,
கடவுளை வணங்க வரும் அமைதி,
உறவுகளின் உரசலில் அன்பு உணர ஒரு அமைதி,
நல்ல பாடல் கேட்க வரும் அமைதி,

வீட்டிற்கு அருகில் சத்தமாய் ஓடிய motor
நின்றால் நிலவும் அமைதி போல்,
மனம் என்னும் motor நிற்க தரும்
சந்தர்பத்தில் அமைதி

எந்த ஒரு உயர்ந்த உணர்வும் மனத்தை நிறுத்தும்,
பக்தி, அன்பு, கலை, காமம் ...
மனதை நிறுத்தாத எந்த உணர்வும் கிழ்தரமானதே,
இதை முக்கியப்படுத்துவதற்கோ என்னவோ,
அமைதி இல்லது இருப்பினும் பததில் அதை
நினைவுபடுத்த "அமைதி - யின்மை" என்றனர்.

சிவந்த கண்கள்; ஓங்கிய கைகள்

பார்க்கும் படம் தோரும் ஓங்கிய கோபம்
சிவந்த கண்கள் முருக்கிய முஷ்டிகள்
கண் முன் நிற்பவனை நொருக்கத் துடிக்கும் ஆக்ரோஷம்
சாய்த்து முடித்த பின் காந்தியின் வழி நடப்பவன் போல்
அன்பாய் நடப்பது பற்றி அறிவுரை

சாந்தமாய் போய் அமர்ந்தால் 3 மணி நேரத்தில்
உடம்பெல்லாம் கோபம் கிளறி வெறியேரிய அனுபவம்
கோபம் தொலைக்க கண்டவனெல்லாம் பலிகடா
கோபம் வளர மீண்டும் சினிமா மீண்டும் வெறி

ஒட்டுமொத்தமாய் இருப்பவனெல்லாம் கோபத்தில்
யார் மீது எதற்காக என்று தெரியாமல்;

மனதினுள் சுதந்திரம், எண்ணத்தில் சுதந்திரம்
வளர்ப்பது எளிதல்ல; முதிராத மனம் இன்று
ரவுத்திரம் மட்டுமே பழகுகிறான். கோபத்தின்
அடிமை எப்படி சுதந்திர மனிதன் ஆக முடியும்

கோபம் எனும் போதை தெளிய,
மீண்டும் மீண்டும் பார்க்கச்சொல்லும் சினிமா
சுகத்தை வெளியே தேடாது தன்னுள்ளே
தேட மனிதனுக்கு சொல்லிதரலாமே

வாழ்க்கையில் உழலும் மனிதன், 3 மணி நேரம்
துன்பத்தை கடக்க கற்றுக் கொள்ள வேண்டும்
கவலை, வருத்தம், கோபம், சந்தோஷம், சாந்தம
என எதையும் உள்ளே சென்று தொலைத்து
சிறு பொறியாய் கோபம் வாங்கி வருகிறோம்,
கோபம் கொண்டு சென்று சாந்தம் வாங்குவது
எப்போது.

Monday, August 13, 2007

என் கவிதை IPO

பதித்த வார்த்தை நான் படிக்க மட்டும்;
கொதித்த நெஞ்சை கொட்டி தீர்க்க
வதைத்த நினைவை கசக்கி வீச
புதைத்த புதையலாய் என் கவிதைகள்

யாரிடமும் சொல்லாத ரகசியம்
இன்னும் அழகாகிடுமோ !

இல்லை,

ஊரிடம் உரைக்காத கவிதை
நான் படிக்க மட்டும் என்றால்;
உன்னிடம் வார்த்தை வாங்காது
நான் வளராது போவேனோ

என்னை இடிக்கப் பிறக்கும் கவிதை
அதைத் தீட்டப் பிறக்கும் உன் வார்த்தை
தீட்டு ...
என் தீட்டுப் போக தீட்டு.

Monday, June 11, 2007

கவிதை கேளுங்கள்

சின்னதாய் பூ பூக்கும் சோலையில்
சிறு குழந்தையாய் விளையாடும் என் மனசு
லேசான வெயிலில் மர நிழலில் இளைப்பார
வாயாட நண்பர் கூட்டம்

பொழுது ஏறி வெப்பம் ஏற
பன்னீரென தண்ணீரில் ஆட்டம்
வேப்பங்காத்து தலை உலர்த்த
சுகமாய் சாய்ந்தபடி ஆயா கையிலிருந்து
தயிர் சாதம்

நீஞ்சிய சுகம் போக நித்திரை
மாலை பொழுதில் மயில் தோகை போல்
ஒரு சங்கீதம். புல்லாங்குழலின் வருடல்.
ஆழ்ந்து அங்கே கரைகின்ற தவம்

பேச்சே தேவையில்லாத நித்திய சுகம்.
இது சுகம் சுகம் சுகம்.

Monday, April 9, 2007

பணப் பசி

வயிறு பசிக்குது என்று உணவு சாப்பிட்டு வந்தேன்,
வினோதமாய் ஒரு பசி நாளுக்கு நாள் அதிகரிக்குதே;
கையில் அள்ளி வாயில் போட்டு தீரும் பசி அல்ல
கையில் வாங்கி பையில் போடும் பசி.

தாள் தாளாய் பெட்டியில் பதுக்கும் பசி,
எண்ணி எண்ணிப் பார்த்து புல்லரிக்கும் பசி,
100 தான் இருக்குது என்று தெரிந்தும் அதை தொடும்
உணர்ச்சிக்காக திரும்ப திரும்ப என்னிப் பார்க்க
வைக்கும் இது தீர்க்கவே முடியாத பசி.

நாளை வாழ்வு சந்தோஷமாய் இருக்க வேண்டும்
அதற்கு இன்று கஷ்டப்பட வேண்டும் என்று
மனதே தன்னை உர்ச்சாகபடுத்திக்கொள்ள
இன்றிலிருந்தே அனுபவிக்க தொடங்கலாம் என்று
மறக்க வைக்கும் ஒரு பசி

தேவை இருக்கோ இல்லையோ அதை
அடைந்தே ஆகவேண்டும் என்று வெறியில்
தினமும் நிம்மதி மறக்க வைக்கும் ஒரு பசி

Friday, February 9, 2007

தலையணை சுகம்

சின்னதாய் வசதியாய் ஒரு தலையணை
சுழன்று ஓடி திரியும் தலையை தாங்க ஒரு குட்டி மெத்தை
நாள் முழுதும் ஓடித் திரிந்த மனிதன் தனக்கே
கொடுத்துக்கொள்ளும் சொகுசுப் பரிசு

யோசித்துப் பார்த்தாயா நீ செய்யும் ஒவ்வொரு வேலையும்
அந்த சின்ன தலையணையில் சொகுசாய் தலை வைக்க
எத்தனை சுகமிருந்து என்ன நிம்மதியாய் தலை சாய்க்க
ஒரு தலையணை கூட இல்லாமல்.

பேராசையாய் சேர்த்து வைத்து சொத்தெல்லாம் பெட்டியில்
பத்திரம் என்று சந்தோசமாய் சாய ஒரு தலையணை
வாங்கி வைத்த சதுர நிலத்தில் யாரும் இன்று குடிசை
போடவில்லை என்று நிம்மதியாய் சாய ஒரு தலையணை
பத்து சில்லரை இன்று சாமர்த்தியமாய் மிச்சம் செய்த
சாதுர்யத்தை மெச்சி சாய ஒரு தலையணை
இழுத்து பிடித்த வியாபரத்தில் முகம் சுழித்த எதிராளி
விட்டுக்கொடுத்த காசில் வெற்றியாய் சாய ஒரு தலையணை
பாவமாய் நின்ற பிச்சைக்கார கிழவனுக்கு பத்து காசு
கொடுத்ததாய் பரோபகார ராஜாவுக்கு ஒரு தலையணை

தூக்கம் வந்ததோ இல்லையோ
தலையணையில் சாய்கின்றா அந்த நேரம் தான்
அந்த நாள் வெற்றியா இல்லை
வழக்கமான தோல்வியா என்று தெரியும்.

எத்தனையோ நேரம் இருந்தும் தலை சாயும் பொழுதில் தான்
நான் இன்று உண்மையிலேயே சாதித்தது சாதனையா என்று விளங்கும்
ஏமாற்ற நினைத்தவனின் முகம் போக மறுக்கும்
மிரட்டிச் சென்றவனின் கண் மரைய மறுக்கும்
அடி பட்டவனின் வலி சற்றுப் புரியும்
பாசம் காட்டிய நெஞ்சத்தின் மென்மை புரியும்
பார்த்து வணங்காது வந்த கடவுளின் கரம் தெரியும்

நாளை மீண்டும் படை எடுத்து வரும்
ஒவ்வொரு நிகழ்ச்சியும் திரும்ப என்று,
நினைவே சோர்வு தர தலையணை துணியில்
தலை அழுத்தி திரும்பி படுத்து மயக்கமாய் தூங்க
மனம் நாடும்.

சிரிது சிரிதாய் தன்மையில் கெடும் என் வாழ்க்கை
நாளையேனும் சின்னதாய் ஒரு ஏற்றம் காணாதா என்று
ஒரு வேண்டலில்,
நாளை பொழுது நல்லதாய் விடியும்,
நாளை கிடைக்கும் நல்ல சுகம் என்று,
நாளைய தலையணை சுகத்தை எண்ணி
இன்று தலை சாய்கிறேன் ...

Monday, December 18, 2006

poetry

school ல படிக்கும்போது poetry னா என்னான்னு definition குடுத்தாங்க.
spontaneous overflow of feelings.

சமீபமா படிச்ச ஒரு அழகான definition
That which can be said can be said through prose. How will you say that which cannot be said if you don't have poetry? It is the language of what cannot really be said, that language that you speak so as not to have to be completely silent, the language of emotion and ecstasy.
- Osho on Zen, The Art of Enlightenment, Fusion Books.

Tuesday, July 18, 2006

எழுத்து நடை

தமிழ் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நடையில் வருவது பார்க்க படிக்க ஆவலைத் தூண்டுகிறது. சாதரணமாக குமுதம் ஆனந்த விகடன் போன்றவற்றில் இருக்கும் நடை எனக்கு வெகு காலமாக பிடிக்கவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் பலர் அதை மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு விடாமல் படிப்பது எனக்கு இன்னும் விந்தையாகவே இருக்கிறது. என் நண்பன் சொல்லுவான் ஒரு வாரம் அதை எடுத்துப் படிக்கும் போது எதாவது ஒரு பொறி தட்டும். எதாவது ஒரு விஷயம் புதிதாய் இருகும், புதிதாய் நம்மை சிந்திக்க வைக்கும் என்பான். நான் அடிக்கடி அது போல் ஆங்கில படங்களில் காண்பதுண்டு. சில சமயம் நான் திரையரங்கை விட்டு வரும்போது உள்ளே போனதை விட அதிகம் பிரகசமாக உர்ச்சாகமாக வருவதுண்டு. ஏதோ நான் இந்த ஊரில் உள்ளவர்கள் வகுத்த விதியை மீரி சாதனைகள் செய்ய முடியும் என்பது போல் ஒரு உர்ச்சாகம் பிறக்கும்.

தமிழ் நடையில் எனக்கு மிகவும் பிடித்தது பாலகுமாரனின் நடை. மிகவும் எளிய வரிகள், மிகவுமே குறைந்த சொற்க்களைக் கொண்டு பெரிய கருத்துக்களை எளிதாக கையாள்வது தான் அவரின் சிரப்பு. சரித்திர நாவல் எழுதும் பலர் அந்த சரித்திர காலதிற்கே சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமான வரிகளை கொண்டு எழுதுகிறர்கள். ஒரு வரி முடியும் பொழுது நம் மனதில் இருக்கும் அந்த கருத்து பாதி மறைந்து எளிமையாக படிக்க விடாமல் தடுப்பதாகவே அமைகிறது.

அதிகம் எழுதாமல் சில முக்கியமான காரணங்களால் எழுத வேண்டிய சூழ்நிலையில் நான் கவிதை எழுதவே முனைகிறேன். கவிதையில் நான் சொல்ல வந்ததை நான் நினைத்த அளவுக்கு உணர்த்த முடியகிறது. சில எளிய சொற்களை வைத்துகொண்டு ஒரு கவிதையின் முடிவில் படிப்பவரின் நெஞ்சை வருடிய நிறைவு கிடைக்கிறதே.

Finding Forrster என்ற ஆங்கிலப்படத்தில் ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சொல்லுவார், keep punching the keys, for gods sake keep punching the keys. You don't need to think just punch the keys. எந்த தடையும் இல்லாமல் அப்படி எழுதும்போது உங்களுக்கு என்ன நடை வருகிறதோ அதுவே உங்கள் நடை.

Wednesday, June 21, 2006

யுவன் சங்கர் ராஜா

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்;

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்;

Tuesday, June 20, 2006

தமிழில் blogging செய்வது எப்படி / How to Write Blogs in Tamil

தமிழில் blog எழுதுவது மிகவும் எளிது. நீங்கள் English ல் எவ்வளவு எளிதாக எழுதுகிறீர்களோ அதே போல் தமிழிலும் எழுத முடியும். தமிழில் எழுத பின் வரும் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
Please take care of the following three aspects to start blogging in Tamil.

1. தமிழ் font

Windows XP போன்ற OS களில் எற்கனவே தமிழ் font நிறுவப்பட்டிருக்கும். இந்த blog உங்களுக்கு தமிழில் சரியாகத் தெரிந்தால் போதும்.

1. Tamil font

Windows XP has a default Tamil font installed. If you can see this blog properly in Tamil then you are done. If not then please find a Unicode Tamil font and install it. It shouldn't be that hard to find one using Google.

2. தமிழில் எழுத ekalappai

Google ல் ekalappai என்று தேடி அதை முதலில் install செய்து கொள்ளவும். இது எந்த editor/input box லும் தமிழில் எழுத உதவும் ஒரு software. இதன் மூலம் நீங்கள் blog ல் post create செய்யும் போது தமிழில் எழுதலாம்.

3. blog template மாற்றங்கள்

சில blog template களில் இருக்கும் stylesheet களால் firefox browser ல் தமிழ் வார்த்தைகள் சரியாகத் தெரிவதில்லை. பின் வருவது blog ன் title க்கு உண்டான stylesheet. இதில் நீங்கள் கடைசியில் உள்ள letter-spacing என்ற entry ஐ நீக்க வேண்டும்.

#blog-title {
margin:5px 5px 0;
padding:20px 20px .25em;
border:1px solid #eee;
border-width:1px 1px 0;
font-size:200%;
line-height:1.2em;
font-weight:normal;
color:#666;
text-transform:uppercase;
letter-spacing:.2em;
}

பின் வரும் style sheet entries
letter-spacing
text-align: justify / left / right

blog ல் தமிழ் வார்தைகள் சரியகத் தெரியாமல் இருக்க முக்கியக் காரணங்கால். இவைகளை நீக்கினால் எல்லா browser களிலும் தமிழை சரியாகக் காண முடியும். blog ன் எந்த பகுதி சரியாகத் தெரியவில்லையோ அதற்கு உண்டான stylesheet ஐ ஆரய்ந்தால் எளிதில் சரி செய்து விட முடியும்.

Monday, May 29, 2006

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிறகு விரிக்க கற்ற காலத்தில்
தோளோடு தோள் சேர்ந்து பறந்த
என் தோழமைக்கு வணக்கம்:

இன்று ஊர் மாறி பறந்து வந்து
வெவ்வேறு காட்டில் வெவ்வேறு கூட்டில்
வசதியாய் இறுக்கிறோம்

பொழுது சாய்கையில், அமைதியாய் அமர்கையில்
மனது மீண்டும் அந்த
தோழமையின் தோள் வேண்டுதடா
சுயமாய் பறக்கக் கற்ற அந்த காற்று வேண்டுதடா

என் பிரிய நண்பா
நீ உன் கூடு உடைத்து உலகம் பார்த்த நாளில்
உன்னை மனமார வாழ்த்துகிறேன்
நீ
இன்னும் உயரமாய் பறக்க
இன்னும் சுகமாய் சிரிக்க

அன்புடன்,
மதன்.