நாம் பார்க்காத நிழல்களில் இயங்கும் உலகின் ஒரு பரிமாணம் என்னைத் தொட்டுச் சென்றது. சட்டத்தின் விளிம்புகளில் வரையரைக் கோடுகள் அவ்வளவு நேர்தியாய் இருப்பதாய் தெரியவில்லை.
பெங்களூர், கம்பெனி வண்டிகள் மாலை வேலை முடித்துத் திரும்பும் போது சில்லரை சேர்க்கப் பொது மக்களை ஏற்றுவது வாடிக்கை. மழைக் குளிரில் அவசரமாய் கிடைத்த வண்டியில் அமர்ந்தேன். 11 மணி நேரப்பயணம் தந்த இறுக்கம், இன்னும் சிறிது நேரத்தில் வீடு என்ற லேசான சந்தோஷம். யாரோ அவர் தொழிலாளர்க்குச் செய்து கொடுத்த சொகுசு நான் இன்று அனுபவிப்பதாய் எனக்குள் உருத்தல்.
முழுவதுமே ஆண்களாய், அமைதியாய் 10 பேர், இப்போது கிளம்பிவிடும் வண்டி என்று அவரவர் சிந்தனை உலகத்தில் எல்லோரும் சென்றாகிவிட்டது. என்னருகே ஒரு காலி இடம்.
மலர்ச்சியாய் ஏறினாள் அந்த திருநங்கை. நேராய் வந்தமர்ந்தாள் என்னருகே. மனிதராய் பாருங்கள் என்றும், சொல்ல முடியாத துன்பம் தாங்குகிறார்கள் என்றும் பரிதாப அலைகள் அதிகம் வீசும் காலத்தில், இயல்பாய் தானிருந்தேன். அவளுக்கு இடப்பக்கம் நானிருக்க, வலப்பக்கம் இருந்தவன் தோளில் சாய்ந்தாள். ஆர்வமாய் சில கேள்விகள் கேட்டாள். சற்று தயங்கி பின் பதில் சொன்னான்.
எழுந்து கொள்ளலாமா என்று யோசித்து சிறிது தயங்கினேன், நான் நினைத்ததாய் இல்லாமல் போனால் அது காயப்படுத்துமே என்று. என் முறை வந்தது. என் தோளும் சரி பார்க்கப்பட்டது. என் மலிவு விலைச் சட்டை நன்கிருப்பதாய் பாரட்டப்பட்டது. எதற்கும் பதிலலிக்காமலிருந்ததால் என் மொழி என்னவென்று விசாரித்தாள். தெலுங்கா, ஹிந்தியா, கன்னடாவா, தமிழா, ஆங்கிலமா, உருதுவா ... அவள் கடைசியாய் கேட்ட மொழி எது என்று புரியவில்லை. மெளனம் காத்தேன். இன்னும் வீடு வர நேரமிருப்பதால் எழுந்து தூரப்போய் நின்றேன்.
சிறிது நேரத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது, என்னை கடந்து செல்லும் போது வருகிறேன் என்றாள் புன்னகைத்தபடி. சங்கடம் விலகியதாய் ஆசுவாசமானேன். வருத்தமாய் இருந்தது.
No comments:
Post a Comment