Friday, December 19, 2008

காணாமல் போனவன்

வாடிக்கையாய் நடந்து வரும் வீதிகள்; கடைப் பலகைகளின் கரைகள் கூட நன்கு பரிச்சயமாய் தோண்றும் என் நகர். இன்று எதுவும் மாற்றமில்லை, சற்று அழுக்கான என் ஷு, ஒரு முரையோ இரு முரையோ போட்ட சட்டை, காலை பேப்பர், எல்லாமே. நடை பாதையில் கால்களின் தாளத்தை பார்த்த படி வெற்று மனதுடன் நடந்திருப்பேன். வியர்த்த அளவு வைத்துப் பார்த்தால் 2 கி.மி இருக்கும். எங்கிருகிறேன் என்று புரியவில்லை, வீடு செல்லும் வழி தெரியவில்லை.

மகன், மருமகள், அம்முவின் பெயர்கள் தவிர வேறு எதுவும் நினைவில் தட்டவில்லை. ஏதோ மெயின் ஏதோ கிராஸ் என்று வரும். உச்சி வெயிலில் கிழக்கு மேற்கு பார்க்க முடியவில்லை. நகரம் முழுவதும், சாப்பிட்ட களைப்பில் லேசான மந்தமாய், சாலைகளில் அவ்வளவு சலசலபில்லை. நான் இப்பொழுது பயப்பட வேண்டுமா ?

அதோ அந்த திருப்பம் தாண்டினால் மெயின் ரோடு வரலாம். கால்களின் தாளம் லேசாய் வேகமாகக் கண்டேன். இபோழுது வியர்வைக்கும் நடந்த தூரத்திற்கும் தொடர்பு இல்லை. திருப்பம் தொட்டு வலப்பக்கம் முட்டுச் சந்து, இடப்பக்கம் இதே போல் எங்கோ பாதை வெகு சிரத்தையாய் கொண்டு செல்கிறது.

தொலைந்து விட்டேன். தொலைத்து விட்டேன்.

கடைப் பலகையின் கரைகள் என்னை பார்த்து சிரிப்பது போல். அம்மு குட்டி மாதிரி. எல்லா இடங்களிலும் அவை ஒரே மாதிரி தான் இருக்கின்றன. கண்கள் பரிச்சயமான வடிவம் எதாவது கிடைக்குமா என்று தேடுகிறது.

ஒரு கடையின் வாசற்படியில் அமர்கிறேன். லேசாய் பதற்றம் மனதில், நிற்க முடியவில்லை. சட்டென்று கண் மூடி வீட்டில் என் ஆசை சாய்வு நாற்காலியில் விழித்துக் கொள்ள மாட்டோமா.

எழுந்து நடந்தேன், சில திருப்பங்கள் தாண்டி, சில பலகைகள் தாண்டி, பலரின் கை காட்டலுக்கு இனங்கி, இன்னும் தொலந்து தான் போயிருக்கிறேன். பதற்றம் குறைந்து விட்டது, சற்று கவலை கால் வைக்கிறது.

கடந்து போகிறவர்கள் எல்லாம், இன்று ஏனோ வெகு அன்னியமாய். எல்லா மனிதர்களின் முகத்திலும் ஒரே உணர்ச்சி. உணர்ச்சியற்ற உணர்ச்சி. சர் சரென்று வாகனங்கள் ஏதே அவசரத்தில். நெற்றியில் கை கொடுத்து தலை மயிர் கால்களை இழுத்துப் பார்கிறேன். தொலைந்து விட்டாயே.

அயிரமாயிரம் மக்களுக்கு நடுவே நான் தனியாய். பாதுகாப்பாய் தோண்றும் பொது ஜனம் இன்று பயமுறுத்தும் தோற்றங்களாய். ஷுவில் ஏதோ பட்டு விட்டது, வீடு சென்றதும் துவைத்துப் போட வேண்டும். வீடு !

புரியாத மொழியில் எழுத்துக்கள், பெயர் பலகைகள், பேருந்துப் பலகைகள், தெருப் பலகைகள். உதவ வரும் மனிதர்கள் சிலர் கோபம் கொள்கிறார்கள். என் நினைவு தெளிவாய் இல்லையே. கையிலிருக்கும் பத்து ரூபாய் போதுமே நான் வீடு சென்றிருப்பேன். அந்த நகர் பெயர் மட்டும் எட்ட மறுக்கிறது. வயது தந்த பரிசு மறதி, தளர்ச்சி.

கால்கள் இன்னும் கொஞச தூரம் நடக்கும். அதன் பின். வயிற்றின் கோரிக்கையை ஏற்று, 7 ரூபாய் செலவு செய்கிறேன். அம்முவுக்கு ஒரு மிட்டாய் வாங்கலாமா. கையில் இருக்கும் இரண்டு நாணயங்கள் என்னை பரிதாபமாய் பார்ப்பதாய்.

இந்த மனிதர்கள், பரிச்சயமில்லாது, கடினமாய், நகரத்தை செலுத்திக் கொண்டு. நகரம் ஒன்றும் புதிதில்லை. ஆனால் இன்று என் பார்வையில் அனைவரும் புதியவராய். 15 நிமிடங்களாய் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சக மனிதனை கவனிக்காத ஒரு பழக்கம். என் வேலை. என் உணவு. என் பாதை. அதுவும் 2 அடி மட்டும்.

Friday, November 14, 2008

எனக்கே எனக்காக

அறையின் மூலையில் கண் பதித்து
கனவு கண்ட காலம் அது
என் மனம் போகும் பாதை சரியா என்று
புரியாத வயதது.

காலையின் எழுந்து எங்காவது சென்று எதையாவது
பயின்று வருவது என்ற வாடிக்கை மட்டுமே பார்த்த பருவம்.

இன்று நாற்காலியின் வடும்பில் தலை சாய்த்து
கண் முன் தெரியும் கூரையில் ஆயிரம் கனவுகள்
பிரதிபலிக்கிறேன், வேகமாய், மிக வேகமாய்
காட்சிகள் மாற, பல யோசனைகள், யுத்திகள்.

கட்டுக்கடங்காது சித்திரங்கள் வளர்ந்தும் எதை
செய்ய எதை தள்ள என்று எங்கோ ஒரு முதிர்ச்சி
வளர்ந்ததாய் ஒரு தன்நம்பிக்கை.

சொல் பேச்சு மட்டும் கேட்டு வந்த சிறுபிள்ளை மனம்
தானாய் கால் நீட்டி, நடை பயிலக் கற்றது காண்கிறேன்
தள்ளாட சட்டென்று நீட்டிப் பிடிக்க, சாய்ந்து அழ,
இன்னும் சில கைகள், தோள்கள் தேடிய போதும்,
எங்கோ ஏதோ ஒரு திர்க்கம்.

முரட்டு தான்-தோண்றித்தனம், சற்று கைக்கு அடங்கியதாய்.

மீசை முளைத்ததை தடவிய வயதுக்கு இன்று போய்
என்னையே சந்தித்து, ஒரு செய்தி சொல்ல ஆசை.
எதிர்காலம் உனக்கு மிகுந்த சுகம்,
நீ கண்ட கனவுகள் நனவாகும், நீ சந்தேகத்துடன்
பயின்ற சில உணர்வுகள் மட்டுமே நாளை உன்னை
கைதூக்கும். தலை கோதி அந்த சிறுவனின்
களங்கமில்லாத கண் பார்த்து நெற்றியில் முத்தமிட்டு
சொல்ல ஆசை.

நீ நடக்க கற்றுக் கொள்வாய், உன் அமைதி இன்னும்
ஆழமாகும், உன் மனம் கரையும் நிமிடங்கள் வரும்.
நீ வைக்கும் அடி சரி. எடுத்து வை, நானிருக்கிறேன்.

Friday, September 26, 2008

போக்குவரத்து இல்லை

எங்கள் வட்டாரச் சொற்றொடர்;
இதயங்களை இணைக்கும் சாலையில் போக்குவரத்து இல்லை
பொருள் இல்லாமல் இருந்த நாளில் கூட இருந்த வரத்து
சொகுசு பெற்ற நாளில் இன்று இங்கு வரவில்லை

தனியாய் இருவர் போடும் சண்டையில்
இரு குடும்பங்களுக்குள் போக்குவரத்து இல்லை
ஒவ்வொரு இதயமும் ஏங்க ஏனோ
அந்த சாலையில் போக்குவரத்தே இல்லை

படித்தவர் படிக்காதவர் என்று பாகில்லாமல்
நினைத்ததும் நிறுத்தப் படும் சாலை இந்தச் சாலை மட்டும்
சில ஆண்டுகளில் ஏக்கப் பெருமூச்சுக்கள் ஆங்காங்கே
அதிகமாக, சில வரட்டு கவுரவங்கள் போட்ட தடுப்புக்கள்
உடைக்கப் படுவதே இல்லை

தனித் தனியாய் நல்லவர்கள் மட்டுமே வாழும் இரு குழுக்கள்
பேச்சுவார்த்தை மட்டும் ஏனோ நடக்கவில்லை
சாலையோரம் இரு புரமும் தள்ளி நட்ட மரம் கூட கை தூக்கி
தன் சகாவின் கை கோர்க்கும் சாலையின் மேலே
அந்த நிழல் காட்டும் பாடம் புரியவில்லையா

இருவரும் கை நீட்டித் தான் தொட முடியும்;
இருவர் கை கோர்த்துதான் சிரிக்க முடியும்;

Monday, September 15, 2008

வேற்று கிரக வாசிகள்

இது ஒரு வழக்கமாகி விட்டது
நரை ஓடிய பெற்றோர்
தம்பதியராய் அமர்ந்து
புது மனை புகு விழா நடக்கிறது

வேற்று கிரகதிலிருந்து தொலைபேசி
அழைப்பு, எல்லாம் நன்றாக நடக்கிறதா,
யார் யார் வந்திருக்கிறார்கள்,
சரி பிறகு அழைக்கிறேன்.

வாங்க மாமா, வாங்க அத்தை,
வாடா மச்சான், அய் குட்டி சட்டை சூப்பர்
என்று, வாய் நிறைய வரவேற்று,
என் இடம் இது, நான் நன்றாய் வாழ
நீங்கள் வாழ்த்துங்கள் என்று
பொரியவர்கள் காலில் விழும் சுகம் ...

புதிதாய் வாங்கிய மனையில் அமர்ந்து
இயற்கைக்கு நன்றி சொல்லி
மன் பிளந்து, பாறை பிளந்து செய்த பாவத்திற்கு
மன்னிப்பு கேட்டு, தெய்வத்தை வணங்கி,
வீட்டை கோவிலாக்கும் சடங்கு செய்து
புல்லரித்து அன்று அங்கு தனியாய் உறங்கும்
சுகம் ...

சுவரின் ஈரம் முகர்ந்து,
இங்கு என் பிள்ளை விளையாடுவான்,
இங்கு என் மகள் கோடு கிழிப்பாள்,
இங்கு என் மனைவி கோலம் போடுவாள்
இங்கு எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சிரிப்போம்
என்று தனக்கு தானே சிரித்து பிரம்மிப்படையும்
அந்த முதல் நாள் ...

(பெருமூச்சு ...)

Monday, September 1, 2008

Biodata

வயது: 2 (கிட்டத்தட்ட)
பற்கள்: 12 + (4 * 1/2)
சமீபத்திய சாதனை: "அப்பய்யா" என்று கூறி வந்தது - open your mouth என்று தெளிவாய்
நீண்ட கால சாதனை: ஓயாது பேசுவது, தெளிவாய் குழப்புவது
சமீபத்திய எரிச்சல்: போராடிக் கிடைத்த vicks கண்ணீர் வரவழைத்தது
நண்பர்கள்: பவ் பவ் என்று அழைக்கப்படும் இரண்டு கரடிக் குட்டி பொம்மைகள்
விரும்புவது: காலணிகள்
விரும்பாதது: உணவு, உடை
வேண்டுவது: கண்ணுக்கு தெரிந்து கைக்கு எட்டாதது அனைத்தும்;

அகராதி:

கொன்னம்மா - உட்கார்
அப்பாயி - அப்பா
பவ் பவ் - நாய்
ஹனினி - ஹரிணி
கம்பிட்ட - computer
சீயா - TV
பா பா ஷீப் - Ba ba black sheep
சாயி - சாவி
பாப்பாக்கு - எனக்கு
டயா - லயா
மந்ந்தன் - மதன்
டொம் போட்டிட்டு - டம் என்று (விழுந்து)
பெளிக்கு - வெளியில்
பலிக்கு - வலிக்குது
சாக்கு - socks
மானாம் - வேண்டாம்
மானா - மாடு
கன்னீ ... குட்டீ - கன்றுக்குட்டி
ஊக்கு - ஊருக்கு
கோயி - கோபி
பிங்க் - என்ன color கேள்விக்கான பதில்
டூ, தீ, செனன், எய்ட் - 1,2,3,4 ...
டூ, தீ - எத்தனை என்று ஆரம்பமாகும் கேள்விக்கு பதில்
மாமா கார் - அப்பாவின் கார் அல்லாத அனைத்தும்
மந்தா - மருந்து
முங்கது - முகமது
மஞ்சள் - மஞ்சு

Monday, August 18, 2008

freewill - destiny/புத்தி - விதி

நீ இத்தனை நொடிகள் தான் வாழ்வாய்;
இந்த நேரத்தில் இங்கிருக்க வேண்டும்,
இதைதான் நினைப்பாய், இவளைத்தான் மணப்பாய்
நீயே தான் செய்தாய் என்று நினைத்தாலும்
விதித்தது நடக்கிறது என்று ஒரு கருத்து

இது destiny - விதி.

ஒவ்வொரு நொடியும் என் கையில்,
ஒவ்வொரு செயலும் என் செயல்,
என் எண்ணம், என் திட்டம்.
நான் போகும் பயணம் நான் வகுத்த பாதையில்.
விதிக்கு இங்கு இடமில்லை. நான் வளைத்தால்
காலம் வளையும்.

இது புத்தி - freewill.

உண்மை இரண்டுக்கும் நடுவில்.
வினையின் பயன் உன் முன் நிற்கும் விதி,
விதியின் உத்வேகம் மீறி நீ செய்யும் செயல்
நீ ஆளும் புத்தி.

புத்தி கொண்டு நீ இன்று செய்யும் வினை நாளை உன் விதி.
நாளைய விதி உன் கையில் இன்று புத்தியாய்.

எதிர்நோக்கும் ஒவ்வொரு நொடியும் நீ செய்த வினையால்
மட்டுமென்று அமர்ந்திருக்க முடியாது
நீ இன்னாருடைய பையன், இவருடைய பேரன்,
உன் நட்சத்திரம், நாள், உணவு, இடம் ...
விதி நீ பயின்ற கணக்கில்லை. புத்தி கொண்டு
புரிவதற்குமில்லை.

உன் கையில் இருப்பது நீ இன்று செய்யும் வினை
மட்டும். விதைப்பது திணையென்றால், விதி மீதென்ன பயம்.

Thursday, April 10, 2008

புவியியல்

நிலம் கீறி வாசம் பார்த்தேன்,
நிமிர்ந்து தொடு வானத்தில்
அனிவகுக்கும் மலைகள் பார்த்தேன்

என் கண் படாது கிடக்கும் நிலத்தில் எல்லாம்
கால் வைக்க ஏக்கம் கொண்டேன்

விரிந்து கிடக்கும் கோரைப்புல் வெளி
அடர்ந்து குளிரும் அந்தக் கானகமும்
வெள்ளிப் பிரளயமாய் அருவியும்
நீர் வற்றி வரண்ட பாலையும் கண்டு
வர நினைத்தேன்

தனி மனிதனாய் ஏதுமில்லா உலகில்
கிடைக்குமா இந்த சுகம் இன்று
கரை தாண்டி நடக்கும் செய்தி
காதில் சேர தொலைக்காட்சி வேண்டாம்

நான் வாழும் பூமி நான் வருடி பழக
விரும்புகிறேன்; மந்தை கூட்டம் மிகுந்த
மனித வாடை இல்லா அந்த புனித பூமி
எனக்கு காணக் கிடைக்குமா.

ஆண் மகன் எனக்கு ஆவின் வேரில்
கண் மறைந்த ஒன்றை வென்று வருவதே
சொல்ல முடியா இன்பம் புரிகிறதா உனக்கு;

("There will be blood", படம் தந்த ஏக்கம்)

Monday, February 18, 2008

பொய் சொல்லலாகாது பாப்பா

கடினமாய்
பாறையாய்
முடிவாய்
அன்பிலாததாய்
உறைந்ததாய்
வெற்றிடமாய்
தோன்றும் ...

இந்த உண்மை
சொல்லச் சொல்ல

குளிர்ந்ததாய்
பவித்ரமாய்
துணிவாய்
நேர்மையாய்

என்னை மாறச் செய்யுதே.

Wednesday, January 23, 2008

மிருகத்தின் நிழலில்

முன்னங்காலில் மானின் கழுத்து அழுத்தி தன்
பசிக்கு விருந்து கிடைத்த சுகத்தில் அந்த புலி.
மொத்தமாய் சில உணர்ச்சிகள் மட்டுமே
அதற்குத் தெரியும். அது மிருகம். சுத்தமான மிருகம்.

புலி பரிணமித்து, முன்ணிரண்டு கால்கள் தூக்கி நிர்க்க
கற்றுக்கொண்டு, இன்று மீசை முளைத்த மனிதனாய்.
பரிசுத்தமான மிருகம் இன்றும் உள்ளே இருக்க
பரிதாபமான மனிதனாய் வெளியே தெரிகிறான்.

அன்பு என்று பிதற்றி கோரைப்பல் தெரியாது சிரிக்கிறான்
நட்பு என்று வேட்டை மறந்ததாய் நடிக்கிறான்
பாசம் என்று நகம் உள்வாங்கி கை கூப்புகிறான்
உண்மை என்று வால் சுருட்டி கண் படாது வைக்கிறான்

சொடுக்கிய நேரத்தில் கண் சுருக்கி பல் காண்பித்து
வால் நீண்டு, நகம் நீட்டி மிருகம் உருமுதே.

கடைத்தெருவில், ரோட்டில், கல்லூரியில், வீட்டில்,
வேடமணிந்து கிழ்தரமாய் ஒரு மிருகம் உலவுதே.
புலி போல் பரிசுத்தமாய் மிருகம் பார்கையில்
பயமில்லை. மனித தோல் போர்த்திய மிருகம் பார்க்க
நடுங்குதே.

ஓடித்திரிந்து வேட்டையாடி, மேய்ந்து தின்று
வாழ்ந்திருந்தால் வாழ்க்கை சுகமாய் இருந்திருக்கலாம்.
தெய்வத்தை தேடும் வேஷமிட்டு, நாளுக்கு நாள்,
மிருகத்தை மட்டும் எதிர்கொள்ளும் அவலம்
இந்த மனிதனுக்கு மட்டும்.

மான்களை ஏனோ நான் அதிகம் பார்ப்பதில்லை,
முதலை, புலி, நரி, பருந்து என்று வகை வகையாய்,
திரும்பும் திசை தோரும். வெறி ஊரிப்போய்
மாமிசம் தின்று மரத்துப்போய் காட்டு ஜீவனின்
கண்கள் மட்டுமே காண்கிறேன்.

தெய்வம் என்று உண்டு என்று ஏன் பொய் சொல்கிறாய்.