Wednesday, December 12, 2007

தங்க மகள்

2 அடி உயரமும் 2 கீழ் பற்களுமாய்
என் தங்க மகள்
குட்டி பொம்மைபோல் வீடெங்கும் திரிகிறாள்
ஏதோ ஞாபகம் வந்தது போல் எனை பார்த்து சிரிக்கிறாள்

கரடிக் குட்டியும் கத்தும் வாத்தும் அவள் தேசம்
கத்தும் நாய் உலக அதிசயம்
நான் கடிந்தாலும் அழுது கொண்டு என்னிடமே
ஆறுதலுக்கு வரும் பஞ்சுப் பதுமை

வார்த்தைகள் இல்லா மொழியில் ஓயாது கதைக்கிறாள்
கோபம் வந்து ஏசுகிறாள்.
உரிமையாய் தோள் ஏறி, ஒய்யாரமாய் சவாரி;
அவள் கை நீட்டிய திசையில் என் கால்கள்

சிரிப்பும், கோபமும், அழுகையும் ஆனந்தமுமாய்
அழகான குணத்தவளாய் அவளே வளர்கிறாள்
என் சிறிய வீட்டில் ராஜாங்கம் நடத்தும்
என் சிட்டுக்குருவிக்கு என் செல்ல முத்தங்கள்

No comments: